Print

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2020  கலைஞர் விருது வழங்கும் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பண்பாட்டு பெருவிழா -2020 ஆண்டிற்கான  கலைஞர்களை கௌரவித்து  விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா கலையரங்கில்  22.03.2021 ஆம் திகதி திங்கட்கிழமை  மு.ப 9.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வடமாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், எமது அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், திணைக்களத் தலைவர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் வாழ்நாள் பேராசியர் அ.சண்முகதாஸ், முனைவர் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ், வாழ்நாள் பேராசிரியர் திரு.சி.சிவலிங்கராஜா, கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள்.

வடமாகாணத்தில் கலைத்துறைக்கு சிறப்புத் தொண்டாற்றி தெரிவு செய்யப்பட்ட  மூத்த கலைஞர்களுக்கு  “கலைக்குரிசில்” விருதும், இளம் கலைஞர்களுக்கு “இளம் கலைஞர்” விருதும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  2019 இல் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட  நூல்களுக்கு “சிறந்த நூற்பரிசு” விருதும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுடன் “யாழ்பாணன்” ஆவணப்பட வெளியீடும் நடைபெற்றது. இத்துடன் பண்பாட்டலுவல்கள் திணைக்கள தொகுதி வெளியீடுகளான “வடந்தை”, “பண்பாட்டு மேம்பாட்டிற்கான கலைகள் இருப்பும் எதிர்பார்ப்பும்”, “யாழ்ப்பாண தமிழர் வாழ்வியற் பண்பாட்டுச் சுவடுகள் -02” என்னும் நூல்கள் வெளியிடப்பட்டன.

கலைஞர்கள், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து  நிகழ்வை சிறப்பித்தனர்.

 

Hits: 2934