Print

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்  நிகழ்வானது  இன்று (03.01.2022) காலை 9.00 மணிக்கு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வளாகத்தில் அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்வி அமைச்சு,  மாகாணக் கல்வித் திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம் ஆகியனவற்றின்  அனைத்து ஊழியர்களும் இவ்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அனைத்து உத்தியோகத்தர்கள் முன்னிலையில் செயலாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்கள் மாகாணக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் நிகழவினைத்தொடர்ந்து யாழ் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்கள் மற்றும் ஏனையவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் கல்வி அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தரினால் அரச சேவை உறுதிமொழி உரத்து வாசிக்கப்பட அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழியினை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் யாழ்ப்பாண மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகரினால் கோவிட்-19 இன் தற்போதைய நெருக்கடி மற்றும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களின் பொறுப்புகள் குறித்தும், இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விளக்கமளிக்ப்பட்டது.

இறுதி நிகழ்வாக அமைச்சுச் செயலாளரினால் ”சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள மகிழ்ச்சியான குடும்பங்களை பண்பாடான ஒழுக்கமுள்ள நீதியாக சமுதாயத்தையும் மற்றும் நீல பசுமை தேசத்தையும் உருவாக்குவதற்காக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்வத்தின் நோக்கு” என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அரச சேவையின் பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்குவதன் தேவையைத் தொனிப்பொருளாகக் கொண்ட அரசசேவை உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையிலான சுருக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

Hits: 2513