Print

வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2022

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2022.07.18 (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் சரஸ்வதி சிலை முன்றலில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், உதவி செயலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர், யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் நிகழ்வு மேடைக்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் தேவாரம் இசைக்கப்பட்டு நிகழ்வு இனிதே ஆரம்பமானது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களால் தலைமையுரையும், இந்திய துணைத்தூதுவர் அவர்களால் பிரதம விருந்தினர் உரையும் நிகழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்திய துணைத்தூதுவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். தேவாரம் இசைத்த மாணவிகளுக்கு இந்திய துணைத்தூதுவரின் கரங்களினால் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தின் பிரபல சங்கீத ஆசிரியர்  திருமதி. வாசஸ்பதி ரஜீந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் சாரங்கா இசைமன்ற மாணவர்களால் ஆடிப்பிறப்பு பாடல் இசைக்கப்பட்டது. மற்றும் வைத்திய கலாநிதி. அருண்பாபு சர்மிளா அவர்களின் நெறியாள்கையில் அரியாலை பிருந்தாவனம் கலாமன்ற மாணவர்களினால் கோலாட்ட நடனமும் அரங்கேற்றப்பட்டது. மாணவர்களுக்கு விருந்தினர்களின் கரங்களால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர்  திரு.ச.லலீசன் அவர்களால் ஆடிப்பிறப்பு பற்றிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து திரு.லலீசன் அவர்கள் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களால் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வானது யாழ்ப்பாண கலாசார உத்தியோகத்தர் திரு.ம.அருள்சந்திரன் அவர்களினால் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது. இறுதியாக எமது திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.ர.பத்மராணி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.

 

 

Hits: 1337