Print

வட மாகாண இசை மற்றும் பாரம்பரிய வாத்திய கலைஞர்கள் வட்டம்- 2022

கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாண கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் “வடமாகாண கலைஞர் பேரவை” அங்குரார்ப்பணநிகழ்வு  06.12.2022ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்றது. இச்செயற்பாட்டில் வயலின், வீணை, தவில், நாதஸ்வரம், பண்ணிசை,  கர்நாடக இசை,  மிருதங்கம், கெஞ்சிரா, கடம், தபேலா, மோர்சிங் முதலான துறைகளில் தேர்ச்சி பெற்ற 25–40 வயதிற்கிடைப்பட்ட கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான வளவாளர்களாக யாழ்பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தின் துறைசார் விரிவுரையாளர்கள் வருகைதந்திருந்தனர்.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மங்கல விளக்கேற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. பூநகரி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.ம.மேர்சி சுஜந்தினி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையினை பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் வழங்கினார். இசை மற்றும் பாரம்பரிய வாத்திய கலைஞர் வட்டத்திற்கான காப்பாளர்களாக திரு.சி.துரைராஜா,  திரு.அ.ஜெயராம்,  திருமதி.கவிதா வாமதேவன்,  திருமதி.ர.வாசஸ்பதி,  திருமதி.க.கிருபாசக்தி,  திரு.கு.நக்கீரன், திரு.கஜன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். வடமாகாண இசை மற்றும் பாரம்பரிய வாத்திய கலைஞர் வட்டம் உருவாக்கம் தொடர்பாகவும் அதன் நோக்கம் தொடர்பாகவும் சங்கீத ஆசிரியர் திருமதி கவிதா வாமதேவன் அவர்களால் நோக்கவுரை ஆற்றப்பட்டது.  அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த கலைஞர்களுடைய சுய அறிமுகம் நடைபெற்றது. மருதங்கேணி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.செல்வசுகுணா சேனாதிராஜா  அவர்களால் மாதிரி யாப்பு வாசிக்கப்பட்டு கலைஞர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடமாகாண இசை மற்றும் பாரம்பரிய வாத்திய கலைஞர்கள் வட்டம் உருவாக்கம் தொடர்பாக நிர்வாகக்குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த திரு.சின்னராஜா அனோஸ்ரீபன் அவர்களும் செயலாளராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.பர்ணந்து அன்ரன் அஜந்தரூபன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டதுடன் ஒவ்வொரு வாத்தியத்துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு நிர்வாகக்குழு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டு செயற்குழுவிற்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து இசை மற்றும் பாரம்பரிய வாத்திய கலைஞர்கள் வட்டத்திற்கான உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. உபகுழுவின் தலைவராக மருதங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த திரு.சபாநேசன் லவ்லி அவர்களும்இ செயலாளராக மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த ச.பிரியதர்சன் குரூஸ் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கலைஞர் ஊக்குவிப்பு தொடர்பான எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் கலைஞர்களால் முன்வைக்கப்பட்டன.  இறுதியாக யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.இ.ஜோன்சன் அவர்களால் நன்றியுரை கூறப்பட்டதுடன் கலந்துரையாடலானது நண்பகல் 12.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

 

Hits: 838