Print

வட மாகாண இசை, பாரம்பரிய வாத்திய கலைஞர்கள் வழங்கும் கலைநிகழ்வு – 2022

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய வடக்கு மாகாண இசை, பாரம்பரிய வாத்திய கலைஞர்களுடைய கலை நிகழ்வானது 17.12.2022ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களுடைய தலைமையில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்; நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களின் பிரதிநிதியாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் திருமதி.நளாயினி இன்பராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண வலயக்கல்வி பணிப்பாளர் திரு.மு.இராதாகிருஷ்ணன் அவர்களும், நிர்வாக கிராம அலுவலர் திரு.ஜோ.பத்திநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினராக பிரபல சங்கீத ஆசிரியர்  திருமதி. வாசஸ்பதி ரஜீந்திரன் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் திரு.எஸ்.சுரேந்திரன் அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர் திரு.பீ.ரமேஸ்வரன் அவர்களும் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மங்கல விளக்கேற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.கி.மாலினி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையினை பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையிலே வடமாகாண கௌரவ ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் வடமாகாண இசை மற்றும் பாரம்பரிய வாத்திய கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு அதனை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் முதற்கட்டமாக இந்நிகழ்வானது இடம்பெறுகின்றது என குறிப்பிட்டிருந்தார். முதல் நிகழ்வாக ஆசிரியர் திருமதி.கவிதா வாமதேவன் அவர்களின் விரலிசை கானங்கள் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து எம்.எஸ்.அனோஸ்ரிபன் அவர்களின் தனி வாய்ப்பாட்டு இசையும், எஸ்.சிவசக்தி குழுவினரின் பண்ணிசையும் நிகழ்வினை அலங்கரித்தன. தொடர்ச்சியாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அவர்கள் பிரதம விருந்தினர் உரையை வழங்கினார். அதன் பின்னர் மன்னார் இசைக்கலைஞர்களின் இசைச்சங்கமம் இடம்பெற்றது. வு.விஷ்ணுதாசன் அவர்களின் புல்லாங்குழல் இசையும், ஆர்.மேகலா அவர்களின் தனிஇசையும் அடுத்தடுத்து விருந்தினர்களுக்கு இனிய விருந்தாக அமைந்தது.

சிறப்பு விருந்தினர் உரையினை யாழ் வலயக்கல்வி பணிப்பாளரும் நிர்வாக கிராம அலுவலர் அவர்களும் வழங்கியிருந்தனர். தொடர்ந்து ஜெ.ஷதுசன் அவர்களின் குரலிசை, விரலிசைகானம் இடம்பெற்றது. கௌரவ விருந்தினர் உரையினை ஆசிரியர் திருமதி.ர.வாசஸ்பதி அவர்கள் வழங்கியிருந்தார். ஆர்.நிரோஜன் அவர்களின் வயலின் இசையும், முழங்காவிலைச் சேர்ந்த டீ.பாலேந்திரன் அவர்களின் சீர்காழியின் பக்திப்பாடல்களும்,  எஸ்.திலக்சன் அவர்களின் தனி இசையும் தொடர்ச்சியாக நிகழ்வினை அலங்கரித்தன. அதனைத்தொடர்ந்து இசை மற்றும் பாரம்பரிய கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக கலைஞர் கௌரவிப்பு இடம்பெற்றது.

இறுதியாக யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.இ.ஜோன்சன் அவர்களால் நன்றியுரை கூறப்பட்டதுடன் நிகழ்வு நண்பகல் 1.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

 

Hits: 1865