Print

ஒளி விழா– 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய வட மாகாண ஒளி விழாவானது 2022.12.26 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30மணியளவில் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் அருட்பணி J.B அன்ரனிதாஸ் (பங்குத்தந்தை, புனித பேதுறு பாவிலு ஆலயம், நவாலி) அவர்களின் இறையாசியுடன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள்; கலந்து சிறப்பித்திருந்தார். கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் உதவி பிரதேச செயலாளர் திருமதி. நேசரட்ணம் செல்வகுமாரி அவர்களும், விசேட அதிதியாக கொழும்பு ஜனனம் அறக்கட்டளை சார்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை கௌரவ உறுப்பினர் திரு. முத்துச்சாமி முகுந்தகஜன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். இவர்களுடன் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர், உதவிச் செயலாளர், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, ஒளியேற்றி இறைவார்த்தை வழிபாட்டுடன்; நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. முதல் நிகழ்வாக வண்ணைக் கலைமன்ற மாணவர்களின் வரவேற்புநடனம் நிகழ்வை அலங்கரித்தது. யாழ் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.வி.சுகுணாளினி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஈச்சமோட்டை, கம்சப்பிரியா இசைக்கல்லூரி மாணவர்களின் கரோல் கீதம் இடம்பெற்றது. நத்தார் ஆசிச்செய்தியினை பங்குத்தந்தை அருட்பணி J.B அன்ரனிதாஸ் அவர்கள் வழங்கியிருந்தார். தலைமையுரையினை வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாவாந்துறை பங்கு மறைப்பாடசாலை மாணவர்களின் நத்தார் கிராமிய நடனம், நவாலி பங்கு பாடகர் குழாம் மாணவர்களின் நடன நிகழ்வு, நவாலி பங்கு இளையோரின் பாடல் மற்றும் நாவாந்துறை பங்கு மறைப் பாடசாலை மாணவர்களது நாட்டுக்கூத்து என்பன தொடர்ச்சியாக மேடையை அலங்கரித்தன. நத்தார் தாத்தா வருகையானது நிகழ்வினை மேலும் மெருகூட்டியது. தொடர்ச்சியாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களால் பிரதம விருந்தினர் உரையும் நிகழ்த்தப்பட்டது.

பிரதம விருந்தினர் உரையினைத் தொடர்ந்து நாவாந்துறை பங்குமறைப் பாடசாலை மாணவர்களின் நத்தார் நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இறுதிக் கலைநிகழ்வாக இடம்பெற்ற ஆனைக்கோட்டை பெத்தானியா திருச்சபை ஞாயிறு மறைப்பாடசாலை மாணவர்களின் இசையும் அசைவும் நிகழ்வு பலரினதும் பாராட்டினைப் பெற்றிருந்தது. தொடர்ச்சியாக நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அனுசரணையாளர் ஜனனம் அறக்கட்டளை, கொழும்பு  அவர்களின் பங்களிப்புடன் விருந்தினர்களின் கரங்களினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.ந.ரஜனி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது பி.ப 06.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

Hits: 3770