Print

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக சினேகபூர்வ T-20 கிரிக்கெட் போட்டி

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக வடமாகாண மற்றும் வடமத்திய மாகாண இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ T-20 கிரிக்கெட் போட்டி 12.02.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம், வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போட்டிக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.மாவட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்ளைப் பெற்றது.

யாழ்ப்பாண அணி சார்பாக அணித்தலைவர் டிலக்சன் 38 ஓட்டங்களையும், வினோஜன் 31 ஒட்டங்களையும், கஜானன் 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தம்புள்ள அணி சார்பில் சந்திஜ மற்றும் சங்கல்ப தலா 3 விக்கெட்டுக்களை அதிகசட்சமாக கைப்பற்றினா;.

134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி 19.1 பந்துப்பரிமாற்றத்தில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் 11 ஓட்டங்களால் யாழ்ப்பாண அணி வெற்றிபெற்றது.

தம்புள்ள அணி சார்பாக ஹரித்த 25 ஓட்டங்களையூம் ஷியாட் 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாண அணி சார்பில் கவிசன் 3 விக்கெட்டுகளையும், சரன் மற்றும் மதுசன் தலா 02 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.

போட்டியின் சிறந்த வீரனாக யாழ்ப்பாண அணித்தலைவர் டிலக்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த விளையாட்டு நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருஅ.உமாமகேஸ்வரன் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் அதிபர்கள் பாடசாலை மாணவர்கள் கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Hits: 13993