Print

மன்னார் மாவட்ட இளம் இசைக் கலைஞர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறையும் கலை ஆற்றுகையும் – 2023

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய வடக்கு மாகாண மன்னார் மாவட்ட இளம் இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறையும் கலை ஆற்றுகை நிகழ்வும் 25.03.2023 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் அவர்களுடைய தலைமையில் மன்னார் மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்  பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து சிறப்பித்திருந்தார்.

மங்கல விளக்கேற்றப்பட்டு, இறைவணக்கத்துடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. இளம் இசைக்கலைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.யே.அயந்தரூபன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையினை மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் அவர்கள் வழங்கினார். பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து உரையாற்றிய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தமது உரையில் ‘மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் இளம் இசைக்கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்களை ஒருங்கிணைத்து முதன்முதலாக இந்தப்பயிற்சிப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இளங் கலைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தத்தமது இசைக் கருவிகளுடன் சமூகமளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இத்தகைய வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தித்தந்த கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் அவர்கட்கும், அனுசரணை வழங்கிய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துப் பண்பாட்டு நிதியம் மற்றும் பயிலரங்கினை வடிவமைத்த வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றிற்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்தப் பயிலரங்கில் துறைசார் வளவாளர்களாக திரு.ஏ.யே.அயந்தரூபன் (வாத்தியக்கலை), திரு.செ.மாசிலாமணி (மன்னார் பாங்கு நாட்டுக்கூத்து), திருமதி மலர்விழி ஒஸ்மன் சாள்ஸ் (ஆர்மோனியம்) திரு.ஜெ.சுரேந்தர் (இசை), திருமதி உசா சிறீஸ்கந்தராசா (கிராமிய நடனம்), திரு.எஸ்.ஏ.உதயன் (மன்னார் பாங்கு நாட்டுக்கூத்து),  திரு.த.டெனீஸ்வரன்(மிருதங்கம்), திரு.பீரிஸ் பெர்னாண்டோ(தபேலா) ஆகியோர் பங்கு பற்றி கலைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கியதுடன்,  நானாட்டான் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.சிபிலா சில்வா மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட கலைமன்றங்களின் இளம் இசைக்கலைஞர்கள், வாத்தியக்கலையை விரும்பி பயிலும் பாடசாலை மாணவர்கள் என 120 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக பயிற்சி பெற்ற அனைவரும் குழுக்களாக இணைந்து தமது கலைப்பயிலரங்கின் நன்மைகளை தனித்தனியாக தெரிவித்ததுடன், சிறுகட்டங்களாக தத்தமது ஆக்கங்களையும் செய்து காட்டினர். நன்றியுரையுடன் நிகழ்வானது பி;.ப 5.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

 

Hits: 823