Print

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை - 2023

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்வானது 18.03.2023 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வணக்கத்திற்குரிய பிரதம குருக்கள் நடராசா தலைமையில் முள்ளியவளை கல்யாண வேலர் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில். நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையானது மங்கல விளக்கேற்றப்பட்டு இறை வணக்கத்துடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி பு.மணிசேகரன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து கல்யாண வேலர் ஆலயத்தின் பிரதம குரு வணக்கத்திற்குரிய நடராசா குருக்கள் அவர்களினால் ஆசியுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி.தவமணிதேவி பாலராஜ் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்வு ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக வளவாளர் திரு.கு.யோகேஸ்வரன் அவர்களினால் மாணவர்களுக்கான யோகாசனப்பயிற்சி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டதுடன், இந்நிகழ்வில் 105 அறநெறி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும், பொறுப்பாசிரியர்கள் 10 பேருமாக மொத்தம் 115 பேர் கலந்து கொண்டமை சிறப்பிற்குரியதாகும். அடுத்த நிகழ்வாக வளவாளர் சங்கீத ஆசிரியர் திருமதி.கமலகாந்தன் சாந்தகுமாரி அவர்களினால் ஐந்து நிமிட குழு விளையாட்டு நிகழ்த்தப்பட்டு மாணவர்களை ஒருநிலைப்படுத்தியதுடன்  திருவெழுக் கூத்திருக்கை ஓதுதலும் பண்ணிசை ஓதுதலும் பயிற்சி மிகவும் சிறப்பாக வழங்கப்பட்டது.

மதிய உணவு இடைவேளையின் பின்னர் தொடர் நிகழ்வாக ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியர் திருமதி.திலகவதி அருளானந்தம் அவர்களினால் மாணவர்களுக்கான பஜனைப் பயிற்சி நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதிபர் திரு.க.திருக்குமரன் அவர்களினால் ஐந்து நிமிட குழு விளையாட்டுடன் அன்பும் அருள்நெறியும் எனும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்தப்பட்டு வினாக்கள் கேட்கப்பட்டு பரிசில்கள் வழங்கி மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் பி.ப 5.00 மணிவரை பயிற்சி வழங்கப்பட்டது.

இறுதி நிகழ்வாக பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கலாசார உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் பி.ப 5.40 மணியளவில் இப்பயிற்சிப்பட்டறையானது இனிதே நிறைவுபெற்றது.

Hits: 8616