Print

வடக்கு மாகாண இப்தார் விழா - 2023  

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக ஏற்பாட்டில் வடக்கு மாகாண ‘இப்தார்’ விழாவானது 18.04.2023ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 05.00 மணியளவில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்களுடைய தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முல்லைத்தீவூ மாவட்ட செயலாளர்  உயர்திரு க.விமலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவூ மாவட்ட மேலதிக  மாவட்ட  செயலாளர்  திரு.க.கனகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பமாக கிரா அத் ஓதுதல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கரைத்துறைப்பற்று உதவி பிரதேச செயலாளர் செல்வி.ஷர்மி சிவசுவாமி  அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்பு வற்றாப்பளை ஆலயத்தின் பிரதம குரு ஸ்கந்தராசக் குருக்கள் அவர்களாலும், வணக்கத்துக்குரிய மௌலவி ஜனாப்.எஸ்.ஜஸ்மின் மௌலவி அவர்களினாலும் ஆசியுரைகள் வழங்கப்பட்டன. அடுத்து கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி மணிவண்ணண் உமாமகள் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. இவர் தனது உரையிலே இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் புனிதத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறியதுடன், வடமாகாண விழாவாக இந்நிகழ்வு இடம்பெறுவதாகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதனையும், பிரதிப் பணிப்பாளர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அறியத்தந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனது உரையிலே இவ்வடமாகாண விழாவினை எமது செயலகப் பிரிவில் நடத்தியமைக்காக கல்வி அமைச்சின் செயலாளருக்கும், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உயர்திரு .க.விமலநாதன் அவர்களது பிரதம விருந்தினர் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையிலே நோன்புப் பெருநாளின் 27ஆம் நாளாகிய இன்று மிகவும் முக்கியமான நாள் எனவும், அந்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் நோன்பு பெருநாளின் சிறப்புக்கள் பற்றியும் விரிவாக உரையாற்றியதுடன் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இப்தார் நிகழ்வு தொடர்பான சிறப்புரையினை அஷ்ஷேஹ் எம்.ஏ.நிம்சாத் (இஸ்லாஹி) அவர்கள் வழங்கினார். மேலும் வணக்கத்துக்குரிய மூன்று மௌலவிகளும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 07 பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரும், ஏனைய அலுவலகங்களிலும் உள்ள இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர்களும், இஸ்லாம் மத அலுவலர்களும், பிரதேச செயலக அலுவலர்கள் முதலாக 150க்கு மேற்பட்டோர் நிகழ்விலே கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

நிகழ்வுகள் வரிசையில் மிகவும் வறிய 22 முஸ்லீம் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் வணக்கத்துக்குரிய மதகுருமார்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து பி.ப 6.19 மணிக்கு நோன்பு திறத்தல் நிகழ்வானது மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வானது பி.ப 6.40 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது

 

 

Hits: 4367