Print

வடக்கு மாகாண ஒளி விழா - 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, வேலணை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய வடமாகாண ஒளி விழாவானது 2023.12.29 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 9.30மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் வேலணை சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விலே வேலணை பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களும், வேலணை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஞானசுந்தரன் அவர்களும், மற்றும் NDB வங்கி வடக்கு கிழக்கு பிராந்திய உதவி முகாமையாளர் திரு. செ. சர்வேஸ்வரன் அவர்களும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் திரு. ந. திருலிங்கநாதன் அவர்களும், கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் திரு. சி. சுரேந்திரன் மற்றும் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லா.நிருபராஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, ஒளியேற்றி இறைவணக்க வழிபாட்டுடன் நிகழ்வானது ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணம் அகவொளி குடும்பநல இயக்குநர் அருட்பணி எம்.டேவிட்அடிகளார் கலந்து சிறப்பித்து நத்தார் செய்தியினை வழங்கியிருந்ததுடன் மாற்றம் நிறுவன இயக்குநர் அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளாரும் கலந்து சிறப்பித்து நத்தார் வாழ்த்துச் செய்தியினை வழங்கியதுடன் சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தல பரிபாலகர் அருட்பணி ஜெகன்குமார்கூஞ்ஞ அடிகளாரும், தீவக இணைப்பாளராகிய போதகர் கிதியோன் அவர்களும் சாட்டி மொஹதீன் ஜூம்மா பள்ளிவாசல் மௌலவி அவர்களும் ஆசிச் செய்திகளை வழங்கி சிறப்பித்தனர்.

அடுத்து நாவாந்துறை மறைப்பாடசாலை, சாட்டி மறைப்பாடசாலை, மண்டைதீவு மறைப்பாடசாலை, அல்லைப்பிட்டி மறைப்பாடசாலை, சாட்டி பங்கு பாடகர் குழாமினர், துறைய+ர் ஐயனார் கலாமன்றம் ஆகியன நத்தார் கலைநிகழ்வுகளை வழங்கி  பார்வையாளர்களது பாராட்டுதலைப் பெற்றன.  இவ் ஒளிவிழா நிகழ்வில் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய மாணவர்கள் 100 பேருக்கு NDB வங்கியின் அனுசரணையுடன் புத்தகப்பைகள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை கொப்பிகளும், விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இறுதி நிகழ்வாக வேலணைப் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி. ம. மேர்சி சுஜந்தினி அவர்களது நன்றியுரையுடன் பி.ப 12.30 மணியளவில் வடமாகாண ஒளிவிழாவானது இனிதே நிறைவுபெற்றது.

 

 

Hits: 2920