Print

வடக்கு மாகாண தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழிற்துறைத் திணைக்களம்,  வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை ஆகியவற்றுடன் இணைந்து நடாத்திய  தமிழ் சிங்கள புத்தாண்டு விழா 2024.01.16 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் வவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் இனிதே ஆரம்பமானது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அவர்களுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்கள பணிப்பாளர், தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள்;, கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர், வவுனியா வடக்கு பிரதேசசபை செயலாளர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், நெடுங்கேணி மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பமாக கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்களது தமிழ் இன்னிய இசையுடன் விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்க்குடில்,  சிங்களக்குடில் ஆகியவற்றை விருந்தினர்கள் பார்வையிட்டதுடன் கௌரவ ஆளுநரால் புத்தாண்டுப் பொங்கல் தொடக்கி வைக்கப்பட்டிருந்தது. வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களது கிராமியக் கதம்பம் நிகழ்வு  கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.  தொடர்ந்து வவுனியா வடக்கு பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தண்ணீர்ப்பந்தலினை விருந்தினர்கள் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இவற்றைத் தொடர்ந்து விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு மேடைநிகழ்வுகள் ஆரம்பமாகின. வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிருபரா~; அவர்களின் வரவேற்புரை, கல்வி அமைச்சு செயலாளரின் தலைமையுரை,   வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களது பிரதம விருந்தினர் உரை என்பன சிறப்பு விடயங்களாக அமைந்திருந்தன. தொடர்ந்து வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம், வவுனியா வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு என்பவற்றால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவு மற்றும் கைவினைப்பொருள் கண்காட்சியினை விருந்தினர்கள் பார்வையிட்டதுடன்  பாரம்பரிய கிளித்தட்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரால் தொடக்கிவைக்கப்பட்டது.  தொடர்ந்து கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், யானைக்கு கண்வைத்தல், தலையணை சண்டை, சமனிலை ஓட்டம், ஊசிக்கு நூல் கோர்த்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

மேடைநிகழ்வில் வவுனியா நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலயம் மாணவர்களின் பரதமும், மாங்குளம் முத்தமிழ் கலா மன்றம் மாணவர்களின் கிராமிய நடனமும், வவுனியா அரங்காலயா மன்றத்தினரது பண்ணிசைவும், வவுனியா போகஸ்வெவ தேசிய பாடசாலை மாணவர்களது கிராமிய நடனமும், வவுனியா நேத்திரலேகா கலாமன்ற மாணவர்களது கிராமிய நடனமும், முள்ளியவளை கற்சிலை மடு பண்டாரவன்னியன் நாடக கலாமன்றத்தினரது அரிவி வெட்டு சிந்தும், வவுனியா குருந்துப்பிட்டிய கஸ்த கலாமன்ற மாணவர்களது கொக்கரி நடன நிகழ்வும் அடுத்தடுத்து நிகழ்வினை அலங்கரித்தன.

தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு விருந்தினர்களினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிறைவாக வவுனியா மாவட்ட சிரே~;ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.திருலிங்கநாதன் அவர்களது நன்றி உரையினைத் தொடர்ந்து நிகழ்வானது பி.ப 3.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

Hits: 2778